ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

யுத்தம் - பாகம் 9



கொட்டித் தீர்த்த மழையின் விளைவாய் பத்மாபூரின் முன்னிரவு குளிர்ந்திருந்தது. அதற்கு மாறாக ஆதித்ய விக்ரமரின் மனம் அனலைக் கக்கிக்கொண்டிருந்தது. நிகரற்ற அதிகாரத்தின் இருசியைக் கண்ட அவர் அதைப் பறிக்க ஒரு பகைவன் வந்ததும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. இதுவரை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி துர்காபுரியின் அரண்மனை அவர் பிடிக்குள் இருந்தது. இப்போது முளைத்திருக்கும் இந்தப் புதிய அபாயத்தை அவர் முளையிலேயே கிள்ளி ஏறிய உறுதிகொண்டார்.

எப்பொழுதும் புன்னகையும் கர்வமும் குடியிருக்கும் தன் தந்தையின் முகம் கோவத்தை வெளிப்படுத்துவதைக் கண்ட திவ்யாங்கன் குழப்பமடைந்தான். அமைதியாய் அவர் அருகில் சென்று அமர்ந்தான். அவன் ஏதும் கேட்கும் முன்னதாகவே விதுரசேனர் விடுத்த திருமணக் கோரிக்கையைக் குறித்துக் கூறினார்.

“இதில் நாம் வருந்துவதற்கு என்ன இருக்கிறது தந்தையே? மகாராணியாரும் இளவரசியும் அல்லவா இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

“இது வெறும் திருமணம் குறித்த விஷயம் அல்லவே மகனே.. இந்த நாட்டின் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யப்போவது யார் என்பதையும் இது தானே தீர்மானிக்கப் போகிறது?”

“அப்படியே ஆனாலும் இதில் நாம் வருந்த என்ன இருக்கிறது தந்தையே? அரசாளும் வாரிசு யார் என்பதை அரச குடும்பம் தானே தீர்மானிக்க வேண்டும்? இளவரசியார் அமரகீர்த்தியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அதைத் தடுக்க நாம் யார்?”

இவ்வாறு கூறும்போது திவ்யாங்கனின் முகம் ஒரு கணம் வாடியது. திவ்யாங்கன் ஒருபோதும் இதற்கு சம்மதிக்க மாட்டான் எனத் தெரிந்திருந்தாலும், இந்த வார்த்தைகளைத் தன் வாயால் வேதனையாகவே இருந்தது. அல்லது அமரகீர்த்தி ஒருவேளை சம்மதித்து விடுவானோ?

“யாரோ ஒரு வந்தேறி ஆட்சி செலுத்துவதற்காக இந்த அரியாசனத்தை இத்தனை காலம் நான் கட்டிக் காக்கவில்லை மகனே..அதில் நீ அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும். அதுவே என் எண்ணம்”

தான் கேட்ட வார்த்தைகளின் வீரியம் திவ்யாங்கனை நிலைகுலையச் செய்தது. தன்னை முன்னிருத்தி இத்தனை பெரிய திட்டத்தை தன் தந்தை திட்டியிருப்பார் என திவ்யாங்கன் எதிர்பார்க்கவில்லை.

“என்ன அபத்தம் இது தந்தையே? என் மனதில் அவ்வாறு எந்த எண்ணமும் இல்லை. இந்த நாட்டை ஆளும் ஆசை எனக்கு ஒருபோதும் வந்தது கிடையாது.”

“பொய்யுரைக்காதே மகனே.. இந்தத் திருமணப் பேச்சைப் பற்றிக் குறிப்பிடும்போது உன் முகம் வேதனையில் வாடுவதை நான் பார்த்தேன். அரசாட்சியை விடு. இளவரசியின் மீது உனக்கு ஆசையில்லை? அவளைத் திருமணம் செய்துகொள்ள நீ விரும்பவில்லை?”

“சத்தியமாக இல்லை தந்தையே”

“பின்னர் ஏன் திருமணம் குறித்த விவாதத்தின் போது வாடினாய்?”

“ஆம் தந்தையே.. அந்தத் திருமணப் பேச்சு எனக்கு வேதனை அளித்தது. ஆனால் அது இளவரசியைக் குறித்தல்ல. இளவரசரைக் குறித்தது.”

ஆதித்ய விக்ரமரின் முகத்தில் குழப்ப ரேகைகள் எட்டிப் பார்த்தன.

“ஆம் தந்தையே.. நான் இளவரசர் அமர்கீர்த்தியைக் காதலிக்கிறேன். வேறு யாரையும் மணமுடித்துக்கொள்ள என்னால் இயலாது.”

ஆதித்ய விக்ரமர் நொறுங்கிப் போனார். திவ்யாங்கனின் வார்த்தைகள் உணர்த்தியதைவிடத் தெளிவாக அவன் குரலில் இருந்த உறுதி அவன் காதலை உணர்த்தியது. கோவத்துடன் அவ்விடம் விட்டுச் சென்றுகொண்டுருந்த தன் மகனை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இது வேகத்தாலோ வலிமையாலோ தீர்க்ககூடிய சிக்கலில்லை. இதைத் தந்திரத்தால் வெல்ல அவர் தீர்மானித்தார்.

சனி, அக்டோபர் 12, 2013

காதலும் காதலிப்பவர்களும்

'காதல்' – இதைவிட என் பிராயத்திலுள்ள மக்களுக்கு அதிக உத்வேகத்தையும், அதிக குழப்பத்தையும் தரக்கூடிய ஒன்று எதுவுமில்லை. எல்லா வலிமைகளையும் தரக்கூடியதும் அதுவே; எல்லா நம்பிக்கைகளையும் தகர்க்கக்கூடியதும் அதுவே. சமீபமாக, என்னைச் சுற்றி காதலாலும், காதல் என்ற பெயராலும் நிகழ்ந்த சில சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்…
சம்பவம் – 1:
என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், என் வகுப்பிலிருந்த இன்னொரு பெண்ணை  காதலித்து வந்தான். ஒருதலைக்காதல்.. அவளுக்கு ஒருவாறாக அவன் காதல் தெரிந்திருந்தும், கடைசி வரை அவன் இவளிடம் தன் காதலை சொல்லவே இல்லை. அவ்வளவு ஏன், இருவரும் ஒருமுறை கூட பேசிக்கொண்டது இல்லை. இப்பொழுது படிப்பு முடிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை போன பின்னும், அவன் இன்னும் அவளையும் தன் காதலையும் மறக்க முடியாமல் இருக்கிறான்..
கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு, குறுந்தகவல் மூலம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவன் பணிபுரியும் இடத்திலும், தங்கியிருக்கும் இடத்திலும் பல கஷ்டங்கள் இருப்பதாகக் கூறினான்.. பிரதானமாகப் பணக்கஷ்டம். என்னால் இயன்ற தேற்றுதலைக் கூறி சமாதானம் செய்ய முயன்ற போது, அவன் சொன்ன வார்த்தைகள் : “ஏதாவது ஒரு கஷ்டம் வந்தா, அவள நினைச்சுக்குவேன் டா.. அவள நினைச்சுக்கிட்டா, எதையும் தாங்கிக்குற சக்தி வந்திடும்.. அவ நினைப்பு தான் என்னை வாழ வெச்சுட்டு இருக்குது”
- - -
சம்பவம் – 2:
இந்த சம்பவம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.. கடந்த மாத இறுதியில், ‘கே’ சமூகத்தில் நன்கு அறியப்பட்டிருந்த ஒரு காதல் ஜோடியில், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அது ’கே’ தளங்களில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளியில், மற்றவரும் தன்னை மாய்த்துக்கொண்டார். மரிப்பதற்கு முந்திய நாள், அவர் பதிந்த இடுகையை வாசித்துவிட்டு, ஒரு துளி கண்ணீரேனும் சிந்தாதிருந்தவர், கண்டிப்பாக மனித ஜாதியை சேர்ந்தவராயிருக்க மாட்டார்.
- - -
சம்பவம் – 3:
கல்லூரிகளையும் காதல் கதைகளையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது. இந்த சம்பவம் எங்கள் கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடியின் கதை. ஒருவகையில், எங்கள் கல்லூரி வாழ்வின் ஆதிக் காதல் இவர்களுடையது தான். கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் முடியும் முன்னரே, இவர்கள் காதல் துளிர்விட ஆரம்பித்துவிட்டது. அந்த இளைஞன், என்னுடைய நெருங்கிய நண்பனாயிருந்த காரணத்தினால், அவர்கள் விவகாரம் முழுதும் எனக்கு கொஞ்சம் நன்றாகவே தெரியும்.
எல்லா காதல் கதைகளையும் போல, இந்தக் காதலிலும் பூதாகரமான பிரச்சினைகள் வந்தன. அந்த இளைஞனின், அதாவது என் நண்பனின் தந்தை, என்னை தனிமையில் சந்தித்து, எப்படியாவது தன் மகனை இதிலிருந்து மீட்க உதவச்சொல்லிக் கேட்டுக்கொண்டார். இவர்கள் சேட்டைகள் குறித்து நான் அவரிடம் சொல்லப்போக, நண்பனிடம் ‘துரோகி’ என்ற பட்டம், சகவாஷ தோஷத்தினால் கல்லூரிப் பேராசிரியரிடம் கெட்ட பெயர் எனப் பல அனுகூலங்கள் எனக்கும் பரிசாகக் கிடைத்தன.
கல்லூரியின் நான்கு வருடங்களில், இவர்கள்தான் மிகப் பிரபலமான காதல் ஜோடி. இந்தப் பெண்ணுக்காக, அந்த இளைஞன் அவன் வீட்டைப் பகைத்துக்கொண்டு, மதிப்பையும் பாசத்தையும் இழந்து பரிதாபமான நிலைக்கு வந்தான். அவளுக்காக அவன் இழந்ததும், அவளுக்கு இவன் செய்தவையும் கொஞ்சமல்ல. அவளால் கிட்டத்தட்ட தன் மொத்தத்தையும் இழந்தான்.
இவற்றுக்கிடையே, ஓரிரு நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது: “எனக்கு வீட்டில் திருமணம் செய்ய வரன் பார்த்துவிட்டார்கள். (வேறு ஒரு பையனைத்தான்!) வீட்டின் கட்டாயத்தால் என்னால் மறுக்க முடியவில்லை. ஜனவரியில் நிச்சயதார்த்தம் இருக்கும். தேதி நிச்சயமானதும் சொல்கிறேன்”
- - -
முதல் சம்பவத்தில் குறிப்பிட்ட அந்த நண்பனைப் பற்றி நினைக்கும்போது, வாழ்வில் ஒரு நம்பிக்கையும் காதலின் மீது ஒரு மரியாதையும் வந்தது. அவனைப் போன்ற ஒருவன் எனக்கு நண்பனாயிருப்பதே பெருமை என்று எண்ணுகிறேன். இரண்டாவது சம்பவத்தில், அவர்கள் எடுத்த முடிவு வருந்தத்தக்கதாய் இருந்தாலும், அவர்கள் காதலின் வலிமை என்னை சிலிர்க்க வைத்தது. ‘கே’ என்றால் வெறுமனே உடல் சுகத்திற்காய் அலைபவன் என்ற பிம்பத்தை சுக்கு நூறாக்கியவர்கள் அவர்கள்; அமரர்கள். மூன்றாவது சம்பவம்? என் வாயால் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.

செவ்வாய், செப்டம்பர் 24, 2013

யுத்தம் - பாகம் 8

பத்மாப்பூரின் வானம் நீலத்திலிருந்து கருமைக்கு நிறம் மாறிக்கொண்டிருந்த அந்தி வேளை. விதுரசேனரின் மனம் தெளிவின் பிரகாசத்திலிருந்து குழப்பத்தின் அந்தகாரத்திற்குள் விழுந்த்கொண்டிருந்தது. மனதின் எண்ணத்தை முகத்தின் பாவத்தால் அறிந்த்கொள்ளும் மதியூகம் உள்ள அவரால், ஆதித்ய விக்ரமரின் மனதிலிருப்பவற்றைப் படிக்க முடியவில்லை. உரையாடலின் போது எதிராள் எதிர்பாராத நேரத்தில் முக்கிய முடிவுகளைக் கூறி, அவர்களின் மன ஓட்டத்தை கணிப்பது அவரின் வழக்கம். ஆனால் அதித்ய விக்ரமனிடம் இந்த வேலை செல்லுபடியாகவில்லை. அவர் உணர்ச்சிகளுக்கு மூடிபோட்டு மூடியிருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால் திருமணக் கோரிக்கை உட்பட முக்கியக் காரணிகள் குறித்த மந்திரியாரின் எண்ணத்தை அவர் அறிய முடியவில்லை. குறைந்தபட்சம் அவர் இவற்றை ஒப்புக்கொள்வார அல்லது முட்டுக்கட்டை போடுவாரா என்பதே மர்மமாயிருந்தது.

இவ்வாறு அவர் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தபோது, வாட்டத்துடன் சென்ற தன் மகன் மிகுந்த குதூகலத்துடன் உள்ளே நுழைந்ததைக் கவனித்தார் விதுரசேனர். இந்த அளவுக்கு அவன் உற்சாகமடையும்படி என்ன நடந்திருக்கும் என்ற குழப்பமும் அவரின் குழப்பப் பட்டியலில் சேர்ந்துகொண்டது. தன்னை நோக்கித் துள்ளலுடன் வந்த மகனிடம், “என்ன மகனே! இவ்வளவு உற்சாகமாய் இருக்கிறாய்.. என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

“அதைப் பின்னர் கூறுகிறேன் தந்தையே… மந்திரியாருடன் நிகழ்ந்த சந்திப்பு எப்படி? சுமூகமாய் முடிந்ததா?”

விதுரசேனர் நிகழ்ந்த உரையாடல் முழுதையும் விரிவாகக் கூற அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், திருமண விஷயம் பற்றிக்கூறியபோது ஆத்திரமடைந்தான்.

“தந்தையே! நான் தங்களின் மேல் மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன். ஆனால் நீங்கள் இப்படி நடந்துகொண்டீர்களே? என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் என் திருமணம் குறித்து எப்படி நீங்கள் முடிவெடுக்கலாம்? எனக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை”

“ஒரு தந்தையாக நான் செய்தது தவறுதான் மகனே... ஆனால் ஒரு தேசத்தின் அரசனாக, கூடும்ப நலத்துக்காக தேச நலத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அது இராஜநீதியாகாது. நாட்டின் நலனுக்காக இந்தத் தியாகத்தை நீ செய்தே ஆக வேண்டியிருக்கிறது”

“உங்களுக்குப் புரியவில்லை அப்பா.. என் இதயம் இப்போது என் வசம் இல்லை. என் காதல் வேறொரு இடத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, இராஜநீதி என்ற பெயரில் ஒரு பெண்ணுக்குத் துரோகம் இழைக்க என்னால் இயலாது.”

விதுரசேனர், ஆகாயம் நொறுங்கி அவர் தலை மீது விழுந்தது போலவும், தன் காலடியில் தரைபிளந்து பாதாளத்தில் விழுந்தது போலவும் உணர்ந்தார். அவர் திகைத்து நிற்க, அமரகீர்த்தி தொடர்ந்தான்: “ஆமாம் தந்தையே! நான் மகாமந்திரியார் ஆதித்ய விக்ரமரின் புதல்வனும், துர்காபுரியின் தளபதியுமான திவ்யாங்கனைக் காதலிக்கிறேன். வேறு யாரையும் என்னால் மனதால்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான்.

விதுரசேனர் தான் கண்ட கனவிற்குப் பல இடையூறுகள் நேரும் என்று எதிர்பார்த்திருந்தாலும், இந்த ரூபத்தில் ஒரு பிரச்சினை வரக்கூடும் என்று நினைக்கவில்லை. அவரின் மகாசாம்ராஜ்ஜியக் கனவு பொலபொலவெனத் தகர்ந்து விழுந்தது.

“எத்தனையோ எத்தர்களை சமாளித்த என்னால் இந்த ஒருவனைச் சரிகட்ட முடியாதா? கண்டிப்பாக ஒரு வழி இருக்கும்.” விதுரசேனரின் நரிப்புத்தி சிந்திக்கத் துவங்கியது. அதட்டி, மிரட்டித் தன் மகனை வழிக்குக் கொண்டுவர முடியாது. இது விவேகத்தால் சாதிக்க வேண்டிய காரியம். கார்மேகத்தைப் பிளந்து வரும் மின்னலைப் போல அவர் மனதில் ஒரு தீர்வு தென்பட்டது. சிக்கலான, ஆனால் கண்டிப்பாய் அனுகூலம் தரக்கூடிய ஒரு தீர்வு. அவர் நேரே தன் மகனைத் தேடிச் சென்றார்.

“மகனே! என் மீது கோவமா?”

அமரகீர்த்தி பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“உன் மகிழ்ச்சியும் நல்வாழ்வும்தான் எனக்கு முக்கியம் மகனே! உன் காதலுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால் உன் காதல் வெற்றியடைய வேண்டுமல்லவா?”

அமரகீர்த்தியின் கண்கள் கோவத்தையும் அதேசமயம் குழப்பத்தையும் வெளிப்படுத்தின.

“நீ சுபர்ணராஷ்டிரத்தின் இளவரசன். நம் நாட்டை ஆளப்போகிறவன். உன்னை நம்பித்தான் நம் நாட்டின் எதிர்காலமே இருக்கிறது. இல்லையா?”

“ஆமாம்”

“திவ்யாங்கன் துர்காபுரியின் தளபதி. அவன் உன்னை மணந்து உன்னுடன் – நம்முடன் – வர சம்மதிப்பானா? அவனால் உனக்காகத் தன் நாட்டைத் தியாகம் செய்ய முடியுமா?”

அமரகீர்த்தி ஏதோ சொல்லத்துவங்க, அவனைக் கையமர்த்தி, “எனக்குப் பதிலளிக்கவேண்டி இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை மகனே! இது உன்னை நீயே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. உன் காதலனைக் கேட்கவேண்டிய கேள்வி. நன்கு யோசித்து முடிவெடு.”

காரியம் கச்சிதமாய் முடிந்த்தை எண்ணி மகிழ்ந்த்தாய் விதுரசேனர். முடிவு எப்படியாயினும், அது அவருக்கு இலாபமாகவே முடியும். ஒருவேளை திவ்யாங்கன் சம்மதித்துத் தன் மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினால், துர்காபுரியின் தெய்வீகப் பாதுகாப்பு அழியும். வெளியேற மறுத்தால் அவர்கள் காதல் அழியும். எப்படியாயினும், அவர் விரும்பியது நடந்துவிடும்.
மகன் பரிசாய் அளித்த குழப்பத்திற்கு வட்டி சேர்த்து, அவனிடமே திருப்பித் தந்துவிட்டுப் போனார் விதுரசேனர். அமரகீர்த்திக்கு இன்றும் தூக்கம் முள்படுக்கையின் மீதே விதிக்கப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

வியாழன், செப்டம்பர் 12, 2013

யுத்தம் - பாகம் 7

படமெடுத்து நின்ற பாம்பைக் கண்டதும் திவ்யாங்கன் உறைந்து நின்றான். அவன் பின்னே வந்துகொண்டிருந்த அமரகீர்த்தி, இதைக் கண்டதும் திவ்யாங்கனைப் பின்னால் இழுக்க, வேகமாக ஏதோ அசைவதைக் கண்ட பாம்பு, திவ்யாங்கனைச் சீண்டப் பாய்ந்தது. ஆனால், கணப்பொழுதில், திவ்யாங்கன் விலகிட, தீண்டப்படாமல் தப்பினான். பின், அமரகீர்த்தியின் தோள்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “அசையாதே, அமைதியாய் இரு” என்றான். ஓரிரு நிமிடங்களில் அந்தப் பாம்பு ஊர்ந்து மறைந்தது. அது மறைந்ததும், அமரகீர்த்தி பதற்றத்துடன், “திவ்யாங்கா! உனக்கு ஒன்றும் இல்லையே.. அந்தப் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா?” என்று கேட்டான். கேட்டவன், அவன் பதிலுக்குக் காத்திராமல், அவனைக் கீழே அமரச் செய்து, அவன் கால்களில் ஏதும் காயம் இருக்கிறதா என்று சோதித்தான்.

“அமரகீர்த்தி.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.. விடு” என்று திவ்யாங்கன் சொன்னதைக் கூட கேட்காமல், தானே பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “நல்லவேளை.. தீண்டிய காயம் ஏதும் இல்லை” என்றான் அமரகீர்த்தி.

“அதைத்தானே நானும் சொன்னேன்” என்றான் திவ்யாங்கன்.

“இதென்ன? இப்படிப் பாம்பு எல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறதே? இதையும் கருவூலத்தில் வைத்துப் பாதுக்காக்கிறீர்களா?”

“அந்தப் பாம்புதான் கருவூலத்தைப் பாதுக்காக்கிறது. அது திருடர்களை அச்சுறுத்துவதற்காக வளர்க்கப்படும் நஞ்சு நீக்கப்பட்ட பாம்பு”

“என்னமோ.. இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்”

“நீயும்தான் அதிகம் பதற்றப்படுகிறாய். நாடாளப்போகும் இளவரசர் ஒரு பாம்பைக் கண்டு இப்படியா அஞ்சுவது?”

“அப்படியில்லை.. ”

“சரி.. என்னை யாரோ ஒரு பெண் காதலிப்பதாகக் கூறினாயே.. யாரது?”

அமரகீர்த்தி அதிர்ச்சியடைந்தான்..

“நீ சொல்லாவிட்டாலும், உன் கண்கள் காதலை சொல்லிவிட்டன. அதுவும்போக, ஒரு இராஜாங்கத்தின் இளவரசன், என் கால்களைத் தொட்டு, பரிசோதித்துப் பார்த்தாயே.. அப்போதே புரிந்துகொண்டேன். சரி, சொல். யாரந்தப் பெண்?”

அமரகீர்த்தியை வெட்கம் ஒருபுறமும், பயம் ஒருபுறமும் முற்றுகையிட்டன.

“எதற்காக அந்தப் பெண்ணைப் பற்றி இவ்வளவு சிரத்தையாய்க் கேட்கிறாய்?” என்று மங்கிய குரலில் கேட்டான்.

“முதலில் நீ அவள் யாரென்று சொல். பிறகு காரணம் சொல்கிறேன்”

“இந்நாட்டு இளவரசியைத்தான் சொன்னேன். இப்போது சொல். ஏன் இவ்வளவு பிடிவாதமாய்க் கேட்கிறாய்?”

“அவளிடம் சென்று ‘நான் ஏற்கனவே ஒரு இளவரசனைக் காதலிக்கிறேன். அதனால் நீங்கள் என்னை மறந்துவிடுங்கள்’ என்று சொல்லத்தான்” என்று சொல்லி, ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றான் திவ்யாங்கன்.

இவர்கள் இருவரும் இங்கு காதல் வளர்த்துக்கொண்டிருக்க, இவர்கள் தந்தைமார் இருவரும் அந்தக் காதலுக்கு வினையை வளர்த்துக்கொண்டிருந்தனர்.

இரண்டு கம்பீரமான, அழகிய வேலைப்பாடுடைய ஆசனங்கள் எதிரெதிரே போடப்பட்டிருக்க, அவற்றின் மத்தியில் ஒரு சிறிய வட்ட வடிவ மேசையில் மலர்க்கொத்தும் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆசனத்தில் விதுரசேனர் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே இருந்த மற்றொரு ஆசனத்தில் துர்காபுரியின் முதன்மை மந்திரி ஆதித்ய விக்ரமன் அமர்ந்திருந்தார். கொஞ்சம் பருத்த உடல், பகட்டான ஆடை ஆபரணங்கள், புன்னகை தவழும் அந்த முகத்தில் அறிவாற்றலும், தந்திரமும் மறைந்திருந்தன. இருவரும் ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“இளஞ்சாமை விலையேற்றம் குறித்த உங்கள் கவலை எனக்குப் புரிகிறது மந்திரியாரே.. ஆனால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் சூழலில், விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. நாட்டின் ஒரு பாகத்தில் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு தானிய உற்பத்தி குறைந்ததால் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று”

“தாங்கள் கூறுவது புரிகிறது வேந்தே.. ஆனால், ஒரேயடியாக இரண்டு மடங்கு விலை உயர்த்தப்படும்போது, அது துர்காபுரியினை வெகுவாக பாதிக்கும். சுபர்ணராஷ்டிரத்துடன் நீண்ட காலம் நட்பு நாடாக இருக்கும் எங்களுக்கு ஏற்றுமதி வரியில் விலக்கு அளித்தால் நன்றாயிருக்கும்”

“சுபர்ணராஷ்டிரம் அதன் எல்லா அண்டை நாடுகளுடனும் நல்ல நட்பையே விரும்புகிறது. நட்புறவைப் பேணி வருகிறது. இப்போது உங்களுக்கு மட்டும் வரிச்சலுகைகள் அளித்தால், மற்ற நாடுகளின் பகையை சம்பாதிக்க வேண்டி வரும். அவர்களும் வரிச்சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோக, நாடு இருக்கும் பொருளாதாரச் சூழலில், இவ்வாறு வரிவிலக்கு அளிப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். நட்பு நாடு என்ற அடிப்படையில் மட்டும் உங்களுக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்க முடியாது அல்லவா? அதற்கு ஏதேனும் விசேஷித்த உறவு இருக்க வேண்டும்”

“விசேஷித்த உறவு என்று வேந்தர் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? எனக்குப் புரியவில்லையே?”

“ஒரு திருமண பந்தம். உங்கள் இளவரசியை எங்கள் மருமகளாக ஆக்கிக்கொண்டால், இரண்டு நாடுகளின் பந்தம் இன்னும் உறுதியாகும். இரண்டு நாடுகளும் இணையும்போது எல்லாப் பிரச்சினைகளும் தீருமல்லவா?”

மகா மந்திரியாரின் முகம் ஒரு கணம் சுருங்கியது. ஒரு மிகச்சிறிய கணம். மீண்டும் அதில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “அதைப்பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லையே வேந்தே” என்றார்.

“துர்காபுரி மன்னரின் மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை நீங்கள்தானே ஏற்று நடத்துகிறீர்கள்? எல்லா அரச அதிகாரங்களும் உங்கள் வசம் தானே இருக்கிறது மந்திரியாரே? உங்களுக்கு இல்லாத அதிகாரமா?”

“ஆனால் ஒரு பெண் இன்னாரைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் காலஞ்சென்ற வேந்தருக்குக்கூட இல்லை அரசே. இதுகுறித்து இளவரசியாரும் மகாராணியும்தான் முடிவெடுக்க வேண்டும்”

“அதுவும் சரிதான் மந்திரியாரே. அப்படியானால் நேரடியாக நானே அவர்களிடம் இதுகுறித்துப் பேசுகிறேன்”

“நல்லது வேந்தே.. தாங்கள் இதுகுறித்து மகாராணியாரைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறேன். இப்போது தாங்கள் விடைகொடுத்தால், நான் கிளம்புகிறேன்”

வரும்பொழுது பால்வடிந்த மகா மந்திரி ஆதித்ய விக்ரமரின் முகம் வெளியேறும்போது நஞ்சைக் கக்கிக்கொண்டிருந்தது. அந்த நஞ்சு காவு வாங்கப் போகும் உயிர்கள் எத்தனை என்பதைக் காலம்தான் அறியும்.

(தொடரும்)

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

யுத்தம் - பாகம் 6

பத்மாபூரில் அந்தப் பிற்பகல் வேளையில், வானம் களேபரத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. அஸ்தமன இருளைப் போல கரும் மேகக் கூட்டங்கள் வானைச் சூழ்ந்திருக்க, அதில், ஒளிக்கீற்றாய் மின்னல்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. இடியோசை பூமியையே அதிரச் செய்ய, மழை மட்டும் பெய்தபாடில்லை. காலையில் தெளிந்திருந்த வானம், பகலில் இருந்த வெயிலின் உக்கிரத்தால் மாலைக்குள் இப்படி ஆகியிருந்தது.

வெளியே இருக்கும் சூழலை அமரகீர்த்தியின் மனமும் பிரதிபலித்தது. காலையில் தெளிவாய், குதூகலமாய் இருந்த மனம், பின்னர் நடந்த சம்பவங்களால், மிகவும் குழம்பிப் போயிருந்தது. அவன் உள்ளத்தில் மின்னலாய்க் கேள்விகள் தோன்றி, இடியாய் அவனைக் கலங்கடித்தன. “இளவரசி திவ்யாங்கனை விரும்புகிறாளோ?” “திவ்யாங்கனும் இளவரசியை நேசிக்கிறானா?” “தந்தையார் இளவரசியை எனக்கு மணமுடிக்க எண்ணுகிறாரா?” “என் மனதிலுள்ள எண்ணத்தை தெரியப்படுத்தினால் தந்தை அதற்கு ஒப்புக்கொள்வாரா?” “ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது?” இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள். கேள்வியின் சுழலில் சிக்கி அவனுக்கு மூச்சு முட்டியது.

“மகனே.. அமரகீர்த்தி”

அவன் திரும்பவில்லை. அவன் மனம் அங்கு இல்லையே.. விதுரசேனன் வந்து அவன் தோளைப் பற்றி உலுக்கியபின் தான் திரும்பினான்.

“மாலை மகாமந்திரியார் வருகிறார் அல்லவா.. அவரை சந்திக்க தயார்செய்துகொள்”

“இல்லை தந்தையே.. எனக்கு உடல்நிலை சௌகர்யமாய் இல்லை. அவரை நான் சந்திக்கவில்லை.. எனக்கு இலேசாக தலைவலிப்பது போல் உள்ளது.”

“சரி மகனே.. நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்.. நான் பார்த்துக் கொள்கிறேன்”

“இல்லை அப்பா.. நான் கொஞ்சம் வெளியே சென்று உலாத்திவிட்டு வரலாம் என நினைக்கிறேன்.”

“மழை நேரம் வெளியே செல்வது நல்லதல்ல மகனே..”

“நான் பார்த்துக் கொள்கிறேன் அப்பா”

உடன் வந்த மெய்காவல் வீரர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, அந்தப் பரந்த நகரின் வீதிகளில் தனியே செல்லலானான். மனம் இருந்த குழப்பமான நிலையில், எங்கு செல்கிறோம் என்று தெரியாமல், கால்போன போக்கிலே நடந்தான். எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் எதுவும் தெரியாமல் நடந்துகொண்டிருந்தான்.

“இளவரசே” என்று ஒரு குரல் அவனை மீண்டும் இவ்வுலகத்துக்குக் கொண்டுவந்தது. அவன் கேட்கத் துடிக்கும் ஒரு குரல். திரும்பிப் பார்க்கும் முன்னரே, அழைத்தது திவ்யாங்கன்தான் என்று அவன் அறிவான். குரல் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தபோது, திவ்யாங்கன் ஓடாத குறையாக அவனை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டான்.

“என்ன இளவரசே.. தனியாக வந்துகொண்டிருக்கிறீர்கள்”

“நான் உங்கள் பிராயத்தினந்தானே.. என்னை நீங்கள் பெயர் சொல்லியே ஒருமையிலேயே அழைக்கலாம்.. இந்த சம்பிரதாய மரியாதை எல்லாம் தேவையில்லை”

“நீங்களும் என்னை அவ்வாறே அழைப்பதானால் எனக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை”

“நல்லது”

“உனக்குப் பிரச்சினையில்லை என்றால் நான் உன்னோடு துணையாக வரவா?”

“நீ எனக்குத் துணையாக வரவேண்டித் தானடா நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று மனதில் நினைத்துக்கொண்டு, “வந்தால் மகிழ்ச்சிதான்” என்றான்.

“எங்கள் பத்மாபூர் அழகாயிருக்கிறதா?”

“பத்மாபூரின் அழகுக்கென்ன? சொர்க்கலோகம்போல இருக்கிறது”

“ஆனால் அதன் அழகில் உன் மனம் ஈடுபடவில்லை போலிருக்கிறதே..”

“புரியவில்லை திவ்யாங்கா.. என்ன சொல்கிறாய்?”

“உன்னைப் பார்த்தால் ஏதோ தீவிரமான சிந்தனையில், கவலையில் இருப்பதுபோல் தெரிகிறதே?”

அமரகீர்த்திக்கு அதிர்ச்சி.. “கள்ளன்.. மனதைத் திறந்து படித்துப்பார்த்தவன் போல் சொல்கிறானே” என்று நினைத்தான்.

“சொல்ல விரும்பாவிட்டால் சொல்ல வேண்டாம்” என்றான் திவ்யாங்கன்.

“எல்லாம் காதல் குழப்பம்தான் திவ்யாங்கா..”

“காதல் குழப்பமா?”

“நான் ஒருவனைக் காதலிக்கிறேன்.. ஆனால் அவன் என்னை விரும்புகிறான என்று அறிந்துகொள்ள முடியவில்லை. இதற்கிடையே, வேறொரு பெண் வேறு அவனை விரும்புவது போல் தெரிகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வருகிறார்களோ என்று அச்சமாயிருக்கிறது..”

“உன் மனம் கவர்ந்த அந்தக் கள்வனிடம் நேரடியாகக் கேட்டுவிட வேண்டியது தானே”

“இல்லை திவ்யாங்கா.. எனக்கு அவ்வளவு துணிவு இல்லை.. ஒருவேளை நான் கேட்டு அவன் மறுத்துவிட்டால், என்னால் அதைத் தாங்கிக்கொள்ள இயலாது”

“அப்படியானால் கொஞ்சம் கஷ்டம்தான்” என்று திவ்யாங்கன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மழை தூற ஆரம்பித்தது.

“புதுமழையில் நனைவது உடலுக்கு நல்லதல்ல.. மழை விடும் வரை, அங்கு இருக்கலாம்” என்று ஒரு சிறிய கட்டிடத்தைக் காட்டினான் திவ்யாங்கன். இருவரும் அந்தக் கட்டிடத்தினுள் சென்றனர்.

அந்தக் கட்டிடத்தில் மிகவும் தீவிரமான காவல் போடப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் ஐந்தடிக்கு ஒரு வீரன் ஆயுதத்துடன் நின்றுகொண்டிருந்தான். சிறிய கட்டிடமானாலும், வலிமையான கருங்கற் சுவர்களால் கட்டப்பட்டிருந்தது.

“இது என்ன இடம்? இங்கு ஏன் இவ்வளவு காவல் போட்டிருக்கிறது?” என்று கேட்டான் அமரகீர்த்தி.

“இது பொக்கிஷக் கருவூலம். அதனால்தான் இவ்வளவு காவல்”

“என்ன? பொக்கிஷக் கருவூலமா? இவ்வளவு சிறிய கட்டிடத்திலா?”

“பொக்கிஷம் இந்தக் கட்டிடத்தில் இல்லை.. இதன் அடியில் இருக்கும் பாதாள அறைகளில் இருக்கிறது.”

“அவ்வளவு பெரிய பாதாள அறைகளா? என்னால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.”

“அவற்றைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டவன், அவனை அழைத்துக்கொண்டு, அருகிலிருந்த அறையில் நுழைந்தான்.

அந்த அறையில், நரைத்த மீசையும், தலைப்பாகையும் அணிந்த முதியவர் ஒருவர் அமர்ந்து ஏதோ குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று, “தனாதிகாரியாரே.. இவர் நம்முடைய அரச விருந்தினரான இளவரசர் அமரகீர்த்தி.. பொக்கிஷ நிலவறைகளைப் பார்க்க விரும்புகிறார். அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்” என்றான்.

அவர் இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மௌனமாக எழுந்து வேறொரு வாயில் வழியாக வெளியேறினார். திவ்யாங்கன் அமரகீர்த்தியை அழைத்துக்கொண்டு, அவர் பின்னே சென்றான். அவர் நேராக எதிரே இருந்த அறைக்குள் சென்று, இவர்கள் இருவரும் உள்ளே வரவும் கதவை உள்பக்கமாகத் தாளிட்டார். அந்த அறையில், கதவுக்கு மேலே இருந்த சிறிய பலகணியைத் தவிர வேறு சாளரமோ துவாரங்களோ ஏதுமில்லை. அறையின் ஒரு மூலையில் ஒரு தீவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அது அந்த அறையையே கோரமாகக் காட்டியது.

தனாதிகாரி எதிரே இருந்த இரும்புக் கதவின் அருகில் சென்றார். அந்தக் கதவில், நாதாங்கியோ, சாவித் துவாரமோ இல்லை. ஒரு அழகிய கைப்பிடியுடனும் கதவு முழுவதும் அழகான பூவேலைப்பாட்டுடனும் இருந்தது. தனாதிகாரி தன் கழுத்தில் இருந்த வட்ட வடிவ பதக்கத்தைக் கழற்றினார். அந்தப் பதக்கதில் வித்தியாசமான, மிகவும் நுட்பமான ஒரு மலரின் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதக்கத்தை கதவின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து அழுத்த, அது திறந்துகொண்டது.

அமரகீர்த்தி அந்தக் கதவின் நுட்பமான பொறியியலில் வியந்துபோனான்.  உறைந்துபோய் நின்றிருந்த அவனை இழுத்துக்கொண்டு அந்தக் கதவைத்தாண்டி உள்ளே சென்றான். தனாதிகாரி அருகிலிருந்த ஒரு கைவிளக்கை ஒளியூட்டி, திவ்யாங்கன் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்று கதவைப் பூட்டி விட்டார்.

“இதென்ன? நம்மை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விட்டாரே..” என்று கேட்டான் அமரகீர்த்தி.

“வருத்தப்படாதே.. என்னால் இதை உள்ளிருந்து திறக்க முடியும். வா… இப்போது பாதாள அறைக்குச் சென்று பார்க்கலாம்”

இருவரும், அங்கிருந்து கீழே சென்ற படிக்கட்டுகளில் இறங்கி பாதாள அறைக்குச் சென்றனர். அங்கு, தங்கக்கட்டிகள், நாணயங்கள், வெள்ளிக்காசுகள் என குவியல் குவியலாக அடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இளவரசனை அவை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் நாட்டுக் கருவூலத்துடன் ஒப்பிட்டால், இங்குள்ள தங்கத்தின் அளவு தூசுக்குச் சமானம்.. அவனை வியக்கச் செய்தது, தரைக்கடியில் இவ்வளவு பெரிய அறையைக் கச்சிதமாகக் கட்டிய அவர்கள் கட்டிட வல்லமையே..

அவன் ஆச்சரியத்தில் நின்றிருக்க, “கீழுள்ள அடுத்த தளத்திற்குச் செல்லலாமா?” என்று கேட்டான் திவ்யாங்கன்.

“என்ன? இதற்குக் கீழ் இன்னொரு தளமும் இருக்கிறதா?”

“இருக்கின்றனவா என்று கேட்க வேண்டும் இளவரசர் அவர்களே..” என்று கிண்டலுடன் கூறினான் திவ்யாங்கன். பின் அவனை அழைத்துக்கொண்டு அதன் கீழிருந்த இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு அழகிய வேலைப்பாடுள்ள கலைப் பொருட்களும், இரத்தினங்களும் இருந்தன. அதைச் சுற்றிப் பார்த்த பின், இறுதியாக அதற்குக் கீழே இருந்த மூன்றாம் தளத்திற்குச் சென்றனர். அங்கு அவன் கண்டவை புத்தகங்கள்!

செப்பேடுகள், காகிதச் சுருள்கள், ஓலைச் சுவடிகள் எனப் பலவிதமான வடிவங்களில் அங்கு புத்தகங்கள் இருந்தன. அத்தனையும், வரிசையாக வகைவாரியாக அலமாரிகளில் அடுக்கப்பட்டு, குறியிடப்பட்டிருந்தன.

“இவைதான் நாங்கள் மிகவும் போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்.. வரலாறு, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு வகையான புத்தகங்களின் மூலப் பிரதிகள் இங்கு இருக்கின்றன. இவற்றில் இருந்து பிரதியெடுக்கப்பட்ட புத்தகங்களை நாடெங்கிலும் இருக்கும் நூலகங்களில் வைத்துள்ளோம்.” என்றான் திவ்யாங்கன்.

துர்காபுரியினரின் இந்தக் கொள்கை, புத்தகங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் பக்தி எல்லாம் அமரகீர்த்தியை மிகவும் வியக்கச் செய்தன. சிறிய நாடாக இருந்தாலும் அவர்கள் இவ்வளவு முன்னேறியிருப்பது இதனால்தான் என்று நினைத்துக்கொண்டான்.

சிறிது நேரம் அங்கிருந்த புத்தகங்களை பார்வையிட்ட பின் இருவரும் திரும்பலாம் என்று எண்ணினர். படிக்கட்டுகளில் ஏறி, ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, அங்கு நின்றுகொண்டிருந்தது, எட்டடி நீளத்தில், பளபளப்பாக, ஒரு பாம்பு!
(தொடரும்)

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

யுத்தம் - பாகம் 5

பத்மாபூரின் சரபேஸ்வரர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடந்துகொண்டிருந்தன. விதுரசேனரும், அமரகீர்த்தியும் மட்டும் அர்த்தமண்டபத்தில் நின்றிருக்க, திவ்யாங்கனும், மற்ற வீரர்களும் ஆஸ்தான மண்டபத்தில் நின்று காவல் காத்துக் கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாவரும் வழக்கம்போல ஆஸ்தான மண்டபத்தில் நின்று தரிசனம் செய்துகொண்டிருந்தனர். விதுரசேனர் உள்ளிருந்த கருவறையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அமரகீர்த்தியின் கவனமோ, வெளியே இருந்தது.
அந்நேரத்தில் இருவர் கவனத்தையும் கவரும்படிக்கு இராஜ அடையாளங்கள் தரித்த இரண்டு பெண்கள் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தனர். தேவ கன்னிகை மண்ணில் வந்தாற்போல அழகான யுவதியும், அவளின் தாயும். அவர்களின் பின்னே உள்ளே வந்த திவ்யாங்கன், “வேந்தே, துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் வந்துள்ளனர்” என்று விளக்கினான். விதுரசேனர் மரியாதை நிமித்தம் புன்னகைக்க, மகாராணியாரும், புன்னகையோ என்று சந்தேகிக்கும்படி ஒரு பாவனை செய்துவிட்டு, கருவறை நோக்கித் திரும்பிக்கொண்டார்.

விதுரசேனர் தரிசனம் செய்து முடித்துவிட்டபடியால், “மகனே.. வெளியேறலாமா?” என்றார். அதற்குத்தான் காத்திருந்தவனாய் உடனே “சரி தந்தையே..” என்று கூறிவிட்டு வெளியே வந்தான். இருவரும் பிரகாரத்தை சுற்றிவிட்டு, மகா மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு சிறிது தூரத்தில் திவ்யாங்கனும் அவன் வீரர்களும் நின்று காவல்புரிந்தனர். விதுரசேனர் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் வண்ண ஓவியங்களும் நிறைந்த அந்த மண்டபத்தின் அழகை இரசித்துக்கொண்டிருக்க, இளவரசர் இரசனை வேறு விதமாய் இருந்தது.

அந்நேரத்தில், துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் அவர்களை நோக்கி வர, இருவரும் எழுந்து நின்றனர். மகாராணி நீலாம்பாள் விதுரசேனரிடம் வந்து, “வேந்தர் எம்மை மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு தரிசிக்க இருப்பதை நாங்கள் அறியவில்லை. தினமும் சரபேஸ்வர மூர்த்தியை தரிசிப்பது எங்கள் வழக்கம். அதன்படியே இங்கு வந்தோம். சன்னிதியில் வைத்து ஒருவருக்கு மரியாதை செய்வது தெய்வநிந்தனை. ஆதலால்தான் என்னால் ஏதும் கூறவில்லை. தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.

“அதனால் என்ன மகாராணியாரே.. நாங்கள் ஏதும் தவறாக நினைக்கவில்லை.” என்றார் விதுரசேனர்.

“நல்லது வேந்தே.. உங்கள் உறைவிடம் சௌகர்யமாக இருக்கிறதா?”

“சௌகர்யத்திற்கு என்ன குறைச்சல் மகாராணியாரே.. துர்காபுரியின் விருந்தோம்பல்பற்றி உலகமே அறியுமே..”

“அது எங்கள் பாக்கியம் அரசே.. நாங்கள் இப்போது விடைபெறுகிறோம்”

அந்தப் பெண்டிர் இருவரும் வாயிலை நோக்கிச் சென்றனர். செல்லும்போது இளவரசி தன் மிரட்சியான கயல் விழிகளினால் திவ்யாங்கனை ஓரப்பார்வை ஒன்று பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள். திவ்யாங்கன் அதை கவனிக்கவில்லை. ஆனால் அமரகீர்த்தி கவனித்துவிட்டான். அவன் உள்ளம் கொதித்தது. இளவரசியின் மீது வேறுப்படைந்தான்.

அவர்கள் இருவரும் கண்ணைவிட்டு மறைந்ததும், “ஏன் தந்தையே.. நாம் இங்கு தரிசிக்க வருவதுகூட தெரியாது என்று கூறுகின்றனரே.. இந்த தேசத்தின் மகாராணிக்குத் தெரியாமலா ஏற்பாடு செய்திருப்பார்கள்?” என்றான் அமரகீர்த்தி.

“அவர் பெயரளவுக்குதான் மகாராணி.. அவரிடம் எந்த அதிகாரமும் பொறுப்பும் இல்லை. மன்னர் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பு முழுதும் மகாமந்திரியாரிடம்தான் இருக்கிறது. காலஞ்சென்ற மன்னருக்கு ஆண்வாரிசு இல்லையாதலால் இளவரசிக்குத் திருமணம் ஆகும்வரை ஆட்சி, அதிகாரம் முழுதும் மகாமந்திரியார் வசம்தான்.” என்று கூறியவர், இரகசியமான குரலில், “அவர் மகாராணியை மதிப்பதில்லை என்றும், எந்த விவகாரத்திலும் மகாராணியின் கருத்தைக் கேட்கவோ ஆலோசிக்கவோ மாட்டார் என்றும் கூறுகிறார்கள்” என்றார்.

“அவ்வளவு செருக்குள்ள மனிதரா அவர்?” என்று இளவரசன் கோவத்துடன் கேட்க, அவனை அமைதியாயிருக்க சைகை காட்டிய மன்னர், சன்னமான குரலில், “தனயன் முன்பாகவே தகப்பனைப் பற்றிக் குறைவாய்ப் பேசினால் அவன் என்ன நினைப்பான்? அமைதியாய்ப் பேசு மகனே” என்றார்.

இளவரசன் குழப்பமாய்ப் பார்க்கவும், “ஆம் மகனே.. மகாமந்திரியாரின் புதல்வன்தான் தளபதி திவ்யாங்கன்” என்றார்.

சிறிது நேர மௌனத்திற்குப்பிறகு, “இளவரசியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் மகனே?” என்று கேட்டார் விதுரசேனர்.

“அடக்கமான பெண். நல்ல குணவதியாய்த் தெரிகிறாள். புத்திசாலியாகவும் இருப்பாள் என்று தோன்றுகிறது”

“அவளை அடையப்போகும் வாலிபன் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?”

“கண்டிப்பாக தந்தையே.. “ என்று கூறியவன், சில கணங்களுக்குப் பின்தான் தன் தந்தையின் மனதிலிருந்த கணக்கைப் புரிந்துகொண்டான். “போரை இப்படியா முடிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?” என்று நினைத்து அதிர்ச்சியுடன் அவன் நின்றிருக்க, “சரி மகனே.. கிளம்பலாம்.. “ என்று சொல்லி அவர் முன்னே செல்லலானார்.
(தொடரும்)

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

யுத்தம் - பாகம் 4

துர்காபுரியின் மிகப் பரபரப்பான அந்த நெடுஞ்சாலையில் அரச விருந்தினரின் பட்டாளம் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. இளவரசன் அமரகீர்த்தியால் அந்த சாலையின் நேர்த்தியான வடிவமைப்பைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இரதமும், புரவியும் விரைந்து செல்வதற்கேற்ற கற்தளம் அமைக்கப்பட்ட சாலை, இரண்டு காதத்திற்கு ஒரு பயணியர் சத்திரம், ஐந்து காதத்திற்கு ஒரு சோதனைச்சாவடி, ஆங்காங்கே காவலர்கள் என மிக பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு என்று திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரப் பயணிகளின் வசதிக்காக என சீரான இடைவெளியில் விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.

துர்காபுரியின் தலைநகர் நோக்கிய இரண்டு நாள் பயணம் விதுரசேனனுக்கும் அமரகீர்த்திக்கும் எவ்வித சிரமமும் இன்றி இருந்தது. ஒரு சிறிய பட்டாளத்துடன் பிரயாணிப்பதால் இத்தனை தாமதம். இல்லையேல் ஒரு பகலில் கூட இந்த தூரத்தைக் கடந்திருக்கலாம். இன்னும் ஒரு நாழிகையில் பத்மாபூருக்குள் நுழைந்துவிடலாம்.

பத்மாபூர் – துர்காபுரியின் தலைநகர். தாமரை போன்ற இதழமைப்புடைய கோட்டைச்சுவரும், அடுக்கடுக்கான கோட்டையின் உட்பிரிவுகளும் கொண்டதால் இந்தப் பெயர் பெற்றது இந்த ஊர். மூன்று அடுக்குகள் கொண்ட அந்தக் கட்ட்மைப்பின் வெளி அடுக்கில் சுற்றுச்சுவரைப் பாதுகாக்கும் படைவீரர்களின் இல்லங்களும், குதிரை, யானை உள்ளிட்ட படை விலங்குகளும், அதைப் பராமரிக்கும் பணியாளர்களின் இல்லங்களும் இருந்தன. மிகப்பெரியதான நடு அடுக்கில் அரச மாளிகை உட்பட மற்ற அனைவரின் உறைவிடம், அங்காடிகள் எல்லாம் இருந்தன. இவற்றின் மையத்தில் இருந்த உள்ளடுக்கில் மிகப் பிரம்மாண்டமான சரபேஸ்வரர் கோயிலும், போர்க்கால உறைவிடம், தானியக் கிடங்கு, ஆயுதக் கிடங்கு, கருவூலம் ஆகியவையும் இருந்தன. ஒவ்வொரு அடுக்கும் வலிமையான சுற்றுச் சுவர் மற்றும் பலமான கதவுகளுடன் முந்தைய அடுக்கை விட உயரத்திலும் இருந்தது. ஒருவேளை ஒரு வெளி அடுக்கை தாக்கும் படைகள் கைப்பற்றிவிட்டால்கூட, உள்ளடுக்குக்குப் பின்வாங்கி, அங்கிருந்து அம்பு உள்ளிட்ட எய்தல் வகை ஆயுதங்களால் தாக்கவும், நிலைகளைக் கண்காணிக்கவும் முடியும்.

கோட்டை வாயிலை அடைந்த அமரகீர்த்தி அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தான். வீரசேனனைப் பார்த்து, “தந்தையே.. யாழிகளின் பாதுகாப்பு இல்லாவிடினும்கூட இந்தக் கோட்டையைக் கைப்பற்றுவது மிக கடினமான காரியமாயிருக்கும்போல இருக்கிறதே” என்றான். அவர் சிறிதாய் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு முன்னேறினார்.

கோட்டை வாயிலில் இவர்களை வரவேற்க ஒரு சிறிய பட்டாளம் நின்றுகொண்டு இருந்தது. முன் வரிசையில் ஒரு வீரன் தாம்பாளத்தில் பரிவட்டத் துண்டையும் மலர் மாலையையும் வைத்திருந்தான். அவன் அருகில், கழுத்தில் இரத்தின ஆரமும், இடையில் உடைவாளும் தரித்த ஒரு யுவன் நின்றுகொண்டிருந்தான். அந்த யுவன் துர்காபுரியின் தலைமைத் தளபதி, திவ்யாங்கன். கற்சிலைக்கு உயிர்வந்தாற்போல கட்டான உடல், வீரத்தை வெளிப்படுத்தும் மிடுக்குடன், புன்னகை சிந்தும் முகத்துடன் இருந்தான். ஆனால் புன்னகை சிந்தியது அவன் இதழ்கள் இல்லை. கண்களால் புன்னகைத்தான்.

விதுரசேனனும், அமரகீர்த்தியும் குதிரையில் இருந்து இறங்கி திவ்யாங்கனை நோக்கி வந்தனர். திவ்யாங்கன் அந்தப் பரிவட்டத்தை எடுத்து விதுரசேனனின் தலையில் அணிவித்தான். பின்பு அந்த மலர் மாலையை எடுத்து அமரகீர்த்தியின் கழுத்தில் சூட்டினான். அவ்வளவு நெருக்கத்தில் புன்னகைக்கும் அந்தக் கண்களின் பிரகாசம் தாங்காமல், அமரகீர்த்தி சட்டென குனிந்துகொள்ள, திவ்யாங்கனின் முகம் ஒரு கணம் வாடியது. இருந்தும் சமாளித்துக்கொண்டு, “பத்மாபூரிற்கு வருகை தந்தமைக்கு நன்றி வேந்தே.. உங்கள் வருகை இரு தேசத்திற்கும் நல்வரவாகுக.. உங்களுக்கான ஜாகை தயாராக உள்ளது. தாங்கள் தயைகூர்ந்து என்னைப் பின்தொடர்ந்து வரவும்” என்று சொல்லிவிட்டு, கோட்டையின் உள்ளே செல்லலானான்.

விதுரசேனர் மீண்டும் குதிரையில் ஏறினார். ஆனால் அமரகீர்த்தி நின்ற இடத்திலேயே உறைந்து சிலையாகி இருந்தான். விதுரசேனர் அழைக்கவும், கனவில் இருந்து விழித்தவன் போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தன் குதிரையில் ஏறினான். அவன் என்ன கனாக் கண்டானோ?

விருந்தினர் அவர்களின் மாளிகைக்குச் சென்றடைந்ததும், திவ்யாங்கன், “வேந்தே.. உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று ஏற்கனவே பொழுது சாய்ந்துவிட்டதால், தாங்கள் இளைப்பறுங்கள். நீங்கள் விரும்பினால், நாளை காலை மகாமந்திரியாரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

“மிக்க மகிழ்ச்சி தளபதியாரே.. ஆனால் நான் நாளை சரபேஸ்வரர் பூசையைக் காண விழைகிறேன். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? மந்திரியாருக்கு சம்மதமானால், அவரை நாளை மாலை சந்திப்பதாகக் கூறவும்” என்றார் வீரசேனன்.

“அப்படியே ஆகட்டும் வேந்தே.. தங்கள் விருப்பப்படியே ஏற்பாடு செய்கிறேன். அதோடு, மன்னர் என்னை திவ்யாங்கன் என்று பெயரிட்டே அழைக்கலாம்”

“இல்லை தளபதியாரே.. தங்கள் பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறதல்லவா..”

“எப்படியோ.. தங்கள் சித்தம் வேந்தே.. இப்போது தாங்கள் அனுமதித்தால் நான் வெளியேறுகிறேன்”

“நல்லது தளபதியாரே.. சென்று வாருங்கள்”

செல்லும் முன் அமரசேனனைப் பார்த்து, “நான் சென்று வருகிறேன் இளவரசே..” என்று சொல்லி புன்னகைத்தான். பின்பு வாயிலை நோக்கிச் சென்றான்.

இளவரசனின் மனம் ஏனோ “திவ்யாங்கா.. போகாதே..” என்று அலறியது. ஆனால் அவன் வாயிலிருந்து ஒலி ஏதும் எழ மாட்டேன் என்றது.. வாயிலை அடைந்த திவ்யாங்கன், இளவரசனின் மனவொலியைக் கேட்டவன் போல, பின்னால் திரும்பி அவனைப் பார்த்து மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, பதிலாக அமரகீர்த்தியின் தூக்கத்தை அள்ளிக்கொண்டு சென்றான்.
(தொடரும்)
Web Analytics